தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
|தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.
சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்க உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென் தமிழக மாவட்டங்கள் (ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, குமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்( தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர்) நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.