தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!
|தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலானது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின்னர் மிகத்தீவிர புயலாக மாறியது. இதற்கு ஹமூன் என்று பெயரிடப்பட்டது.
இந்த புயலானது இன்று ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தீவிர புயலாக இருந்த 'ஹமூன்' புயலாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.