9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
|சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை (திங்கட்கிழமை) 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு ஆகியவை காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.