தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நேற்று (09-05-2023) காலை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (10-05-2023) 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் தென் மேற்கே) நிலை கொண்டுள்ளது.
இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை (11-05-2023) காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு வாக்கில் மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, நகர்ந்து 13-05-2023 முதல் சற்றே வலுக்க்குறைந்து 14-05-2023 காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10-05-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-05-2023 முதல் 14-05-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.