< Back
மாநில செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
18 Jun 2024 8:02 AM IST

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. பருவமழை தொடக்கத்தில் தீவிரமாக காணப்பட்டது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. வடதமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, சென்னையில் காலை வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 23-ந்தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வருகிற 21-ந்தேதி வரையில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும். சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்