< Back
மாநில செய்திகள்
அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அதிகனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..?

தினத்தந்தி
|
19 May 2024 5:18 AM IST

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை பெரும்பாலான இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான கோவை, தென்காசி, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 3 இடங்களில் மிக கனமழையும், 9 இடங்களில் கனமழையும் பதிவானது.

அதிகபட்சமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 17 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், குன்னூர் பி.டி.ஓ பகுதியில் 14 செ.மீட்டர் மழை பதிவானது. உசிலம்பட்டி, மஞ்சளாறு பகுதியில் தலா 9 செ.மீட்டரும், சிவகிரி, கீழ்கோத்தகிரி எஸ்டேட், பர்லியார் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

'சிவப்பு' எச்சரிக்கை

இந்த நிலையில், தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேனி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுகிழமை), நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 3 நாட்கள் கனமழை முதல் அதிகனமழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) கனமழை முதல் அதிகனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதற்கான 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், நாளை (திங்கட்கிழமை), விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை), விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழையும், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகிற 22-ந் தேதி தமிழகத்தின் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்