< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
6 Nov 2023 5:51 AM IST

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கான ‘மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்திருக்கிறது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வால்பாறையில் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான இடங்களிலும், நாளை மறுதினம் (புதன்கிழமை), அதற்கு அடுத்த 2 நாட்கள் (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை) அனேக இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்'

மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக 'மஞ்சள் அலர்ட்' விடுத்துள்ளது. இந்த இடங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்