தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
|தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 6-ந்தேதியில் இருந்து தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதவிர, நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் நாளையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.