தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா..? - வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
|கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருக்கிறது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு - புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன்படி கடந்த 3, 4-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை கொட்டியது. அதேபோல 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களை கனமழை புரட்டிப் போட்டது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு - புதுச்சேரியில் 44 செ.மீ. என்பது இயல்பான மழை அளவு ஆகும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே அந்த இயல்பு அளவை தாண்டிவிட்டது. அதுமட்டுமன்றி இந்த ஆண்டு பருவமழை ஜனவரி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருக்கிறது. இது கடல் பகுதியில் மழையை கொடுக்கும். அதேவேளை நிலப்பகுதிக்குள் இந்த நிகழ்வு கடந்து வரும்பொழுதும் மழை இருப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இம்மாத இறுதிவரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 2 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக தூத்துக்குடி மக்கள் இந்த மழையால் அச்சமடைய தேவையில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.