மதுரை
ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வைகாசி திருவிழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு எழுந்தருளினார். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். அமைச்சர் மூர்த்தி தேர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன், கோவில் செயல்அலுவலர் இளமதி மற்றும் பக்தர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள். தேர் அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. வழிநெடுக அம்மனை வரவேற்று பக்தர்கள் பூஜைகள் செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகில சரவணன், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, சுகாதாரபணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன், வார்டு கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், சத்யபிரகாஷ், குருசாமி, ஈஸ்வரி ஸ்டாலின், முத்துச்செல்வி சதீஷ்குமார், செந்தில்வேல், சிவா, நிஷா கவுதமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை பக்தர்கள் சூறை விட்டனர், சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர்.
தீர்த்தவாரி
இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, இளங்கோ உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.