< Back
மாநில செய்திகள்
பட்டா வழங்காவிட்டால் குடியரசு தினத்தன்று காலவரையற்ற உண்ணாவிரதம் - இச்சிப்பட்டி ஊராட்சி மக்கள்
திருப்பூர்
மாநில செய்திகள்

பட்டா வழங்காவிட்டால் குடியரசு தினத்தன்று காலவரையற்ற உண்ணாவிரதம் - இச்சிப்பட்டி ஊராட்சி மக்கள்

தினத்தந்தி
|
12 Dec 2022 11:10 AM GMT

இச்சிப்பட்டி ஊராட்சியில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க இடையூறு செய்து வருகிறார்கள். அதை தடுத்து பட்டா வழங்க வேண்டும். அவ்வாறு பட்டா வழங்காவிட்டால் குடியரசு தினத்தன்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று மக்கள் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்து முறையிட்டனர்

திருப்பூ

இச்சிப்பட்டி ஊராட்சியில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க இடையூறு செய்து வருகிறார்கள். அதை தடுத்து பட்டா வழங்க வேண்டும். அவ்வாறு பட்டா வழங்காவிட்டால் குடியரசு தினத்தன்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என்று மக்கள் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். பல்லடம் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இச்சிப்பட்டி ஊராட்சி கொட்டி முத்துபாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை புறம்போக்கு என்று இருந்ததை வகை மாற்றம் செய்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த 2010-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மு.பெ.சாமிநாதன் இருந்தபோது மனு கொடுக்கப்பட்டு அவர் நடவடிக்கையால் நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டது.

அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. மூலம் பட்டா வழங்க பரிந்துரை செய்து வருவாய்த்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து அனுமதி வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு அதற்கான கடிதமும் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. தற்போது வரை எங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.

காலவரையற்ற உண்ணாவிரதம்

ஒது ஒருபுறம் இருக்க அப்பகுதியை சேர்ந்த கல் குவாரி உரிமையாளர்கள், எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்காக அதிகாரிகள் துணையோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு பட்டா வழங்குவதற்கான சம்பந்தப்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க செடி நாற்றுகளை நடவு செய்துள்ளனர். மேலும் தனியார் மூலமாக கோர்ட்டிலும் வழக்கு தொடுத்துள்ளனர். மரங்களே இல்லாத நிலையில் மரங்களை வெட்ட தடை கேட்டு மனு செய்து இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து ஆய்வு செய்து எங்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆண்டு காலமாக வீட்டுமனைப்பட்டா கேட்டு வரும் எங்களை காப்பாற்ற வேண்டும்.

வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இல்லாத பட்சத்தில், இச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள 6 கிராம பொதுமக்கள் குடும்பத்துடன் அரசியல் கட்சியினருடன் சாமளாபுரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு குடியரசு தினத்தன்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். உடனடியாக பட்டா வழங்கி உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

----

Related Tags :
மேலும் செய்திகள்