தஞ்சாவூர்
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி பறிக்க முயற்சி
|ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து சங்கிலி பறிக்க முயற்சி செய்த இரண்டு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40). இவர் நேற்று முன்தினம் மதியம் ஒரத்தநாட்டுக்கு சென்று விட்டு, தனது உறவினரான கவிதா (34) என்பவருடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சங்கீதா ஓட்டினார். கவிதா பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்கள் தேத்தாவாடி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் ஸ்கூட்டரை வழிமறித்து சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதாவும், கவிதாவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியதுடன், சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த 2 பேரும் கவிதாவின் கையில் இருந்த பர்சை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அந்த பர்சில் ரூ.1,500 பணம் இருந்தது. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.