திருவாரூர்
பேரூராட்சி கவுன்சிலர் மகளை தாக்கி சங்கிலி பறிக்க முயற்சி
|முத்துப்பேட்டையில் புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் பேரூராட்சி கவுன்சிலரின் மகளை தாக்கி சங்கிலி பறிக்க முயன்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டையில் புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் பேரூராட்சி கவுன்சிலரின் மகளை தாக்கி சங்கிலி பறிக்க முயன்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காங்கிரஸ் கவுன்சிலர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருப்பவர் சரிபா பேகம். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனது மகள் மற்றும் உறவினர்களுடன் இருந்தார். அப்போது வீட்டின் கதவை புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் தட்டி உள்ளார். அவர் கல்யாணத்துக்கு அழைக்க வந்திருப்பதாக கூறியதால், சரிபா பேகத்தின் மகள் வீட்டின் கதவை திறந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் சரிபா பேகத்தின் மகளின் கழுத்தில் தாக்கி தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர், அந்த பெண்ணை தள்ளிவிட்டு வீட்டுக்குள் ஓடி வந்து விட்டார்.
தப்பி ஓட்டம்
இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் வாசலுக்கு வந்து பார்த்தபோது அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சரிபா பேகத்தின் கணவரும், முன்னாள் கவுன்சிலருமான மெட்ரோ மாலிக் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.