தஞ்சாவூர்
வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
|திருச்சிற்றம்பலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சங்கிலி பறிப்பு
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல்சாமி. இவருடைய மனைவி ஜெயராணி (வயது 62). இவர் முன்னாள் ஒட்டங்காடு ஒன்றிய கவுன்சிலர் ஆவார். ஜெயராணியும் அவரது சகோதரி ஆரோக்கியமேரியும் மேல ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது முகத்தை துணியால் மூடியபடி வீட்டுக்குள் புகுந்த 2 பேர் ஜெயராணி கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். மேலும் அதனை தடுக்க முயன்ற ஆரோக்கிய மேரியையும் கீழே தள்ளிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து அவர் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகான் அங்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு திருச்சிற்றம்பலம்) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர். தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. நள்ளிரவில் வீடு புகுந்து தங்க சங்கிலி பறித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.