தஞ்சாவூர்
பெண்ணிடம் 11½ பவுன் சங்கிலி பறிப்பு
|தஞ்சையில் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 11½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சையில் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 11½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் நகை பறிப்பு
தஞ்சை மாதாக்கோட்டை நல்லநகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மனைவி நீலாவதி (வயது 63). இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.திடீரென அந்த மர்ம நபர்கள் நீலாவதி கழுத்தில் கிடந்த 11½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நீலாவதி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
போலீசில் புகார்
இது குறித்து நீலாவதி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.