சினிமாவில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு சான்றிதழ் - ஐகோர்ட்டு உத்தரவு
|மராட்டிய மாநிலத்தைப் போல சினிமாவில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தென் இந்திய திரைப்பட டம்பி எபக்ட்ஸ் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக போலி தூப்பாக்கிகளை கொண்டு சென்ற போது, அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மராட்டிய மாநிலத்தில் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு எண் வழங்கப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அவ்வாறு செய்துள்ளனர். இதனால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு டம்மி துப்பாக்கிகளை கொண்டு செல்ல எளிதாகிறது. அதுபோல, தமிழ்நாட்டிலும் டம்மி துப்பாக்கிகளுக்கு எண் வழங்கி, உரிமம் வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வைத்திருக்க கூடிய அனைத்து டம்மி ஆயுதங்களையும் காண்பிக்க வேண்டும். அதனை பரிசோதனை செய்த பிறகு அதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, "மனுதாரர்கள் வைத்திருக்கும் டம்மி ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால். சம்பந்தப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் மனுதாரர் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அதன்பிறகு ஆயுதங்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.