தர்மபுரி
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்கலெக்டர் சாந்தி வழங்கினார்
|தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் 329 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரம் நடைபெறும் கூட்டங்களில் தரப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
சான்றிதழ்கள்
கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி கையேடுகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்த 16 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் கலெக்டர் சாந்தி வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.