கடலூர்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழா: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் தொல்.திருமாவளவன் எம்பி பேச்சு
|இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா நேற்று காலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் இருக்கை உதவி பேராசிரியர் ராதிகாராணி வரவேற்றார்.
இந்திய அரசியல் சாசன முகப்புரையை திருமாவளவன் வாசிக்க, அதனை அனைவரும் உறுதிமொழியாக ஏற்றனர்.
இந்திய மொழிப்புலம் முதல்வர் முத்துராமன், அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சென்னை எஸ்.ஆர்.எம். சட்டப்பள்ளி பேராசிரியர் வின்சென்ட் காம்ராஜ் சிறப்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிதி பங்களிப்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உத்தமசோழமங்கலம் நடுநிலைப்பள்ளியில் கழிவறை கட்டுவதற்கான சி.எஸ்.ஆர். திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கொள்கை அறிக்கை
விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட இந்த நாள், இந்தியாவே கொண்டாட வேண்டிய நாளாக உள்ளது. இன்று நாம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு அடிப்படையே இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் காரணம். நாட்டை நல்லிணக்கத்துடன் வழிநடத்த கூடியது, இந்திய அரசியலமைப்பு சட்டம் தான்.
டாக்டர் அம்பேத்கர் எல்லோரையும் ஒரு சாதி சங்க தலைவராக பார்க்கவில்லை. அப்படி ஒரு குறுகிய கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் இப்படிப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை அவர் எழுதியிருக்க முடியாது. இது வெறும் சட்டம் அல்ல. ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் ஒரு கொள்கை அறிக்கை. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த இந்தியாவில் கல்வி, உரிமை, சகோதரத்துவம், நீதி, சுதந்திரம் அனைத்தும் மறுக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவில் மறுக்கப்பட்ட அனைத்தும் கிடைத்து மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே அரசியல் அமைப்பு சட்டத்தின் நோக்கமாகும்.
பாதுகாக்க வேண்டும்
இந்தியா ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறிய நாள்தான் இந்த நாளாகும். சமத்துவம் இன்மையை தகர்த்தெறிவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் சமூக நீதி. இதனை நடைமுறைப்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் முக்கிய நாளாகும். இந்த அரசியலமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.