< Back
மாநில செய்திகள்
மத்திய அரசில் ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய மந்திரி எல்.முருகன்
மாநில செய்திகள்

மத்திய அரசில் ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
20 Jan 2024 2:30 AM IST

நாட்டில் ஒளிபரப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி உள்ளார் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

சென்னை,

தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி ரூ.39 கோடியே 71 லட்சம் செலவில் புதுப்பொலிவூட்டப்பட்டு 'டி.டி. தமிழ்' என்ற பெயரில் நேற்று ஒளிபரப்பை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி தொடக்க விழாவில், 'டி.டி. தமிழ்' ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.

முன்னதாக டி.டி. தமிழ் தொலைக்காட்சி சேவை தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மாறுபட்ட கோணத்தில் 'புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள்' என்ற முழக்கத்தோடு 'டி.டி. தமிழ்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இருக்கும். சிறிய வயதில் நாம் அனைவரும் விரும்பிய நிகழ்ச்சி 'ஒலியும், ஒளியும்'. ஆனால் காலப்போக்கில் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தற்போது 'ஒலியும், ஒளியும்' நிகழ்ச்சி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், குடும்ப நாடகங்கள் வர உள்ளது.

மத்திய அரசின் நிகழ்ச்சிகள், திட்டங்கள், நாட்டின் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம் பெறும். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு கண்டிப்பாக இருக்கும். நாட்டில் ஒளிபரப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் எல்லைப்புற கிராமங்களில் ஒளிபரப்பை மேம்படுத்த முடியும்.

நாடு முழுவதும் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற பெயரிலான யாத்திரை 3 ஆயிரம் வாகனங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 200 வாகனங்களில் 12 ஆயிரம் கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி அன்று இந்த யாத்திரை தொடங்கியது. தற்போது 10 ஆயிரம் கிராமங்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. இந்த யாத்திரை நிகழ்ச்சி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மீதமுள்ள 2 ஆயிரம் கிராமங்களில் இந்த யாத்திரையை நிறைவு செய்துவிடுவோம்.

மத்திய அரசின் திட்டங்கள் இந்த யாத்திரை மூலம் நேரடியாக சொல்லப்படுவதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. 2047-ம் ஆண்டு வளர்ந்த பாரதத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் 'மோடி கியாரண்டி' என்ற வாகனம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று வந்திருக்கிறது.

செங்கோட்டையில் நரேந்திர மோடி பேசும்போது, 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று சொல்லி இருந்தார். அவர் சொன்ன மாதிரியே ஒரே ஆண்டில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்