தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
|தஞ்சையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மழையால் நனையும் நெல்மணிகள்
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்ததோடு ஈரமான நெல்லை சாலையில் கொட்டி காய வைத்துள்ளனர். இருந்தபோதிலும் மழையால் தார்ப்பாய்க்குள்ளும் தண்ணீர் ஊடுருவி நெல்லின் ஈரப்பதம் அதிகமாகிறது.
22 சதவீதம் வரை ஈரப்பதம்...
இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் கொள்முதல் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. மத்திய அரசுக்கு உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார்.
மத்திய குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐதரபாத் மற்றும் சென்னையில் உள்ள மத்திய தர கட்டுப்பாட்டு மையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று தஞ்சை வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஐதராபாத் உணவு தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனரும், குழு ஒருங்கிணைப்பாளருமான கான், சென்னை உணவு தரக்கட்டுபாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி யுனஸ் உள்பட 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கருத்துக்களை கேட்டனர்
அப்போது அங்கு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல்லின் ஈரப்பத அளவை சரி பார்த்தனர். எந்த சதவீதத்தில் ஈரப்பதம் அளவு உள்ளது? நாள் ஒன்றுக்கு எத்தனை டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கொள்முதல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் விவசாயிகளிடம் நெல்லின் ஈரப்பதம் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து குறிப்பு எடுத்து கொண்டனர். விவசாயிகளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
ஆய்வுக்காக எடுத்து சென்றனர்
பின்னர் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம், அடுத்து தொடர்ந்து மழை பெய்தால் எந்த முறையில் நெல் கொள்முதல் செய்யப்படும் போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் சேகரித்தனர். மேலும் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லையும் ஆய்வுக்காக சிறிதளவு எடுத்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு ஆய்வை முடித்துக்கொண்டு தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு நடத்தி விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மத்திய அரசுக்கு அறிக்கை
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தஞ்சையை ெதாடர்ந்து திருவாரூரில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வை முடித்து விட்டு முடிவில் விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள், கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்புவர். அதன் பிறகே நெல்லின் ஈரப்பதத்தை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம் என்பதை மத்திய அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.