சேலம்
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: இரும்பாலையில் தென் மண்டல ஐ.ஜி. விசாரணை
|மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை சம்பவம் தொடர்பாக இரும்பாலையில் தென் மண்டல ஐ.ஜி.அஞ்சனா சின்கா விசாரணை நடத்தினார்.
சேலம்,
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தேனி மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர், சேலம் இரும்பாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் பணியில் இருந்தபோது சக்திவேல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சக்திவேல் கடந்த 4-ந் தேதி விடுமுறை கேட்டதாகவும், ஆனால் அவருக்கு 7-ந் தேதி காலை தான் விடுமுறை அனுமதி தகவல் வந்ததாகவும், இதனால் விடுமுறை கிடைக்க தாமதம் ஆனதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி சித்ராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தென் மண்டல ஐ.ஜி. விசாரணை
இந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி.அஞ்சனா சின்கா நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் இரும்பாலைக்கு சென்று சக்திவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். விடுமுறை கிடைக்காததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? விடுமுறை கொடுக்க தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தும், சக்திவேலுடன் பணியில் இருந்த சக வீரர்களிடமும் தென் மண்டல ஐ.ஜி.அஞ்சனா சின்கா 3 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் சக்திவேல் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.