மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் - வைகோ
|மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழுவை மத்திய பா.ஜனதா அரசு 13.7.2023 அன்று அமைத்தது.
தற்போது இந்த நிலைக்குழுவை மத்திய அரசு கலைத்திருக்கிறது. முறையான காரணம் இன்றி நிலைக்குழு உறுப்பினர்களுக்கு கூட தகவல் அளிக்காமல், குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. புள்ளியியல் நிலைக்குழுவின் தலைவரிடம் கூட கலந்து ஆலோசனை மேற்கொள்ளாமல் திடீரென்று குழுவை மத்திய அரசு கலைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
சமூக நீதியை முறையாக செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்தநிலையில் மத்திய அரசு புள்ளியியல் நிலைக்குழுவை கலைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருவது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.