மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வு: தமிழக மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் - இன்று நடக்கிறது
|மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வுக்கான தமிழக மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்களை வெற்றி பெறச்செய்வதற்கான பயிற்சி கருத்தரங்கம் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு 'பி' மற்றும் 'சி' பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டு மாணவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில், மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுனர்களை கொண்டு ஒருநாள் கருத்தரங்கத்தை நடத்துகின்றன.
இந்த கருத்தரங்கம் 9-ந்தேதி (இன்று) சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.
நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக இணையதளத்திலும் https://youtu.be/ZTNqcXYp6QU அரசு கேபிள் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.