வெள்ள பாதிப்பு நிவாரணம்; மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை - கனிமொழி எம்.பி.
|தமிழகத்திற்கு எதையுமே செய்யக்கூடாது என்ற மனநிலையில் மத்திய அரசு இருப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கவில்லை என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. இதுவரை அவர்களது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. இன்றுவரை யாருக்கும் 15 லட்சம் ரூபாய் வந்து சேரவில்லை. விவசாயிகளுக்கு அவர்கள் தருவதாக சொன்ன தொகை குறைந்து கொண்டே வருகிறது. கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைந்து வருகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை. மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு மக்களுக்கான நிவாரணங்கள் அனைத்தையும் தமிழக முதல்-அமைச்சர்தான் தந்துகொண்டிருக்கிறார்.
இதனிடையே மத்திய அரசு சார்பில் 2 மூத்த அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுச் சென்றனர். ஆனால் வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தரவில்லை. தமிழகத்திற்கு எதையுமே செய்யக்கூடாது என்ற மனநிலையில் மத்திய அரசு இருக்கிறது."
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.