< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் மாதிரி பள்ளியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது-கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்
மதுரை
மாநில செய்திகள்

மத்திய அரசின் மாதிரி பள்ளியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது-கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்

தினத்தந்தி
|
11 Jun 2023 2:14 AM IST

மத்திய அரசின் மாதிரி பள்ளியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.


மத்திய அரசின் மாதிரி பள்ளியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.

கருத்தரங்கம்

கல்வி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை காத்திடவே மாநில கல்வி கொள்கை என்ற தலைப்பில் மதுரை கே.கே.நகரில் உள்ள நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சமுதாய கூடத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. பொது பள்ளிக்கான பள்ளி மேடை, நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை, சோக்கோ அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் செல்வ கோமதி தலைமை தாங்கினார். பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசினார். சோக்கோ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் மகபூப் பாட்சா, இந்திய சமூக விஞ்ஞான கழக செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இந்த கருத்தரங்கில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை அரசின் செலவிலும் பொறுப்பிலும் வழங்கிட வேண்டும். அதற்கு வழி செய்யும் "மாநிலக் கல்விக் கொள்கை"யை உருவாக்க வேண்டும். பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உயர் கல்வியில் தரத்தை வரையறை செய்தல், தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியின் அனைத்து அம்சங்களும் மாநிலச் சட்டப்பேரவையின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். எம்.பி.பி.எஸ் போன்ற தொழில்முறை படிப்புகளில் நுழைவு தேர்வு என்பது மருத்துவக் கல்வியை வணிகமயம் ஆக்குவதை ஊக்குவிக்கும். கிராமப்புற சுகாதார சேவையின் தரத்தை பலவீனப்படுத்தும். பள்ளிக் கல்வியை வலுப்படுத்துவதும், பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் உயர் படிப்பில் சேருவதும் மட்டுமே சரியானதாக இருக்கும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

மாதிரி பள்ளி

முன்னதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் பதவி என்பது ஒரு சடங்கு பதவி மட்டுமே. அவர் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பட்டங்களை மட்டுமே வழங்கலாம். கவர்னர், பல்கலைக்கழகங்களில் கொள்கை முடிவுகளை எடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசின் கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மட்டுமே எடுக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழக அரசின் விதிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அதே போல் பல்கலைக்கழகங்களுக்கு என வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதனை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும். ஏனென்றால் தேசிய கல்வி கொள்கையில் இருக்கும் இந்த அம்சத்தை தமிழக அரசு பின்பற்றுவது தவறானது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது ஒரு சிறந்த கல்வி கொள்கையை தமிழகத்தில் கொண்டு வருவேன் என்றார். இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும்.

மாதிரி பள்ளியை அனுமதிக்கக்கூடாது

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வரக்கூடாது. தமிழகத்திற்கு ஏற்ற சிறந்த கல்வி கொள்கையை தான் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் மாதிரி பள்ளியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது. ஏனென்றால் நமக்கான கல்வி கொள்கை இருக்கும் போது மாதிரி பள்ளியை கொண்டு வந்தால் தேசிய கல்வி கொள்கையை நாம் ஏற்று கொண்டது போல் ஆகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்