'மத்திய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது' - முத்தரசன்
|தகுதி, திறன் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு பா.ஜ.க. சமூக அநீதி இழைத்து வருகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் தேர்வு முறையை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக இருக்காது. அது பூஜ்ஜியமாக கருதப்படும் என்று மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இதனால் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை மற்றும் பட்டயப்படிப்பு பயில நீட் மதிப்பெண் அவசியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒன்றிய அரசின் தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் கட்டாயம் என நிர்ப்பந்தப்படுத்தி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூக பிரிவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மழைக்கால புற்றீசல்கள் போல் தோன்றியுள்ள நீட் பயிற்சி மையங்கள் மூலம் பணம் பறிக்கும் சமூக கொள்ளைக்கு ஆதரவு காட்டி வரும் பாஜக ஒன்றிய அரசு - தகுதி, திறன் என்ற பெயரில் அடித்தட்டு மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறது. இந்த சமூக அநீதி களையப்பட நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு கேட்டு தமிழ்நாடு முனைப்புடன் போராடி வருகிறது.
இந்த நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு மூலம் வடிகட்டி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கல்வி உரிமையை மறுத்து விட்டு, முதுநிலை படிப்பில் உயர் சாதி பிரிவினர் தடையின்றி நுழைய கதவு திறந்து விடும் வஞ்சக செயலாகவே ஒன்றிய அரசின் செயல் அமைந்திருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், நீட் தேர்வு முறையை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது."
இவ்வாறு முத்தரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.