சேலம்
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது
|மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
பொதுக்கூட்டம்
சேலம் 5 ரோடு அருகே மெய்யனூர் ரோட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ் (மேற்கு), யுவராஜ் (மாநகர் மாவட்டம்), அய்யப்பன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட அமைப்பாளர் அமிர்த்தராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசின் செயல்பாட்டால் நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
புதிய கல்வி கொள்கை
மத்திய அரசால் பணக்காரர்கள் மட்டும்தான், மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். மாநில உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் மருத்துவம் படிக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. மேலும் புதிய கல்வி கொள்கையை திணித்து வருகின்றனர். மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம், அதிகாரம் இல்லாத அமைப்பாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தில் மதமோதல்களை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் 8 வழிச்சாலை, ஹட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
மேட்டூர் காவிரி உபரிநீர் திட்டத்தை சேலம் மாவட்டம் முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே அவற்றை தடுக்க வேண்டும். டாஸ்மாக் ஆலைகள் மற்றும் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். வனப்பகுதிகளை பாதுகாத்த வீரப்பனுக்கு மேட்டூரில் மணிமண்டபம் கட்ட அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர் ஓமலூர் அன்புராஜா, மாநில பொறுப்பாளர் ரா.பிரபாகரன், மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.