< Back
மாநில செய்திகள்
மீனவர்களை அபராதமின்றி மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மீனவர்களை அபராதமின்றி மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

தினத்தந்தி
|
19 Sept 2024 1:30 PM IST

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததும், 45 மீனவர்களுக்கு இலங்கை அரசால் அபராதம் விதிக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கது. சிறைபிடிக்கப்பட்ட, அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை அபராதமின்றி மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்து காவல் முடிந்த நிலையில் மீனவர்கள் 10 பேருக்கு ரூ. 3.50 கோடி அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 35 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையின் காவல் நிறைவடைந்த நிலையில் நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 லட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி (இந்திய மதிப்பில் ரூ 2.76 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி தமிழக மீனவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து அச்சத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசு, அபராதமும் விதித்திருப்பதால் மனிதாபிமானம் எங்கே என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் உச்சக்கட்ட அச்சம் அடைந்து, மீன்பிடித்தொழில் தொடருமா என்ற வேதனையில் உள்ளனர்.

மத்திய அரசு கைது செய்யப்பட்ட, சிறையில் அடைக்கப்பட்ட, அபராதம் விதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்களை அபராதம் இல்லாமல் மீட்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை இலங்கை அரசிடம் கண்டித்து, இது போன்ற செயல்கள் இனி தொடரக்கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், படகுகளையும் மீட்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்