< Back
மாநில செய்திகள்
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
28 March 2024 12:00 PM IST

தமிழகம், புதுவை மீனவர்களை அண்மையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையும் கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உறுதியளித்த பா.ஜ.க.வின் பத்தாண்டு காலமும் மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

அண்மையில் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகு உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ராமேஸ்வரம் அந்தோணி முத்துவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர்கள் அந்தோணி லோபஸ், முருகானந்தம் ஆகிய இருவருக்கும் தலா ஆறுமாத சிறை தண்டனையும் விதித்து யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை பாஜக அரசு அரசியல் உறுதியுடன் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காததால் தற்போது இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தண்டனை விதித்து சிறையில் அடைத்து வருகிறது.

மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என வலியுறுத்துகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்