தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் - மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்...!
|மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. நேற்று முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மிக்ஜம்' புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி.கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மிக்ஜம் புயலால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.