< Back
மாநில செய்திகள்
பெண் கல்வி, சுகாதாரத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது - மத்திய இணை மந்திரி தகவல்
மாநில செய்திகள்

பெண் கல்வி, சுகாதாரத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது - மத்திய இணை மந்திரி தகவல்

தினத்தந்தி
|
10 Oct 2022 3:01 PM IST

பெண் கல்வி, சுகாதாரத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய இணை மந்திரி அன்னப்பூர்ணாதேவி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்தி வழங்கி வருவதாகவும் மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னப்பூர்ணாதேவி நாமக்கல்லில் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய கல்வித் துறை இணை மந்திரி அன்னப்பூர்ணா தேவி இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் மற்றும் மாவட்ட கலெக்டர், அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அவர், திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது எனவும், நமது நாட்டின் வளர்ச்சி கிராமப்புறங்களில் இருந்து தொடங்குவதால் பிரதமர் நரேந்திர மோடி கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு கல்வித்துறையில் கடந்த 2018- 19 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவும், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக 15 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிலையங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இதுவரை 15 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை நிறுவி உள்ளதாகவும், மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் 226 பள்ளிகளில் தனித்திறன் மேம்பாட்டு மையத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போஷான் அபியான் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம் ஆண்டில் பள்ளியில் மதிய உணவு திட்டத்திற்கு அதிக அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது எனவும், தமிழகம் முழுவதும் இதுபோன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினர் திரு. ஏ.கே.பி சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் இ. ஆர். ஈஸ்வரன் மற்றும் அதிகார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்