< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணை
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
27 Sept 2023 5:55 AM IST

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வான 156 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பணி நியமன ஆணையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

சென்னை,

மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார்.

அதன்படி, நாடு முழுவதும் 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் பல லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

9-வது கட்டமாக நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட பல கட்ட தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது.

பிரதமர் தொடங்கிவைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 156 பேருக்கு மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தபால்துறை, வருவாய் மற்றும் நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அதிகளவில் பங்கேற்க வேண்டும்

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பிற மாநிலத்தவருக்கும் பணிநியமனம் வழங்கப்படுகிறது. கிளார்க், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கூட இதர மாநிலங்களில் இருந்து வருவோர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்காததால் பிற மாநிலத்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்பதன் மூலமே தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணிகளை பெற முடியும்.

சிறந்த சேவை

மத்திய அரசின் துறைகளில் பணியமர்த்தப்படும் போது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையினை சரிவர செய்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடினார்

இதன்பின்பு பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அவர் கலந்துரையாடினார். தேர்ச்சி பெற்ற குறுகிய காலத்திலேயே பணிநியமன ஆணைகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் பணி நியமனம் பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட முதன்மை தபால் துறை தலைவர் சாருகேசி, தபால்துறை தலைவர் (தபால் மற்றும் வணிக மேம்பாடு) ஸ்ரீதேவி, சென்னை மண்டல தபால் துறை தலைவர் நடராஜன், இயக்குனர் சோமசுந்தரம், வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர், ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை ஆணையர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலிக்கா ஸ்ரீனிவாஸ், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயின், சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம்நிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோன்று தமிழகத்தில் மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 533 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்