< Back
மாநில செய்திகள்
தக்காளி விலை உயர்வை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
திருச்சி
மாநில செய்திகள்

தக்காளி விலை உயர்வை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
17 July 2023 12:57 AM IST

வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக உள்ளது. தக்காளி விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

வேளாண் கண்காட்சி

திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வருகிற 27-ந் தேதி வேளாண் கண்காட்சி தொடங்குகிறது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கல்லூரியில் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேர் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் வருகிற 27, 28, 29-ந் தேதிகளில் வேளாண் சங்கமம் என்ற பெயரில் கண்காட்சி நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். கண்காட்சியில் விவசாயத்தில் எளிமையான முறையில் லாபம் தரக்கூடிய வழிமுறைகள் குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பயிர்வகைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். திருச்சியில் நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பொறியியல் துறை சார்பிலும் விவசாயத்துக்கு தேவையான எந்திரங்கள் குறித்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டு எந்தெந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான பயிர்களை பயிர்செய்யலாம். பயிர்களுக்கு சவாலாக உள்ள பூச்சி தாக்குதல், அதற்கு என்ன மாற்றம் செய்யலாம். வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்கக்கூடிய வகையிலும் பயிற்சி வழங்கப்படும். விதைகள் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படும். தக்காளி விலை உயர்வு என்பது சீசன் காலத்தில் ஏற்படுகிற பிரச்சினை. மழைக்காலங்களில் ஏற்படுகிற இடர்பாடுகளால் தான் தக்காளி விலை உயர்ந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால், தக்காளியை வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்து, மக்களுக்கு சிரமமின்றி ரேஷன்கடை, உழவர் சந்தைகளில் விற்பனை செய்துள்ளோம். இது பாராட்டுக்குரிய செயலாகும். வட மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தக்காளி விலை குறைவாக தான் உள்ளது. ஆனால் மத்திய அரசோ தக்காளி விலை உயர்வை பற்றி கண்டுகொள்ளவில்லை. இது சம்பந்தமாக எந்த கூட்டமும் நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்