விருதுநகர்
துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
|உயர்ந்து வரும் துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
உயர்ந்து வரும் துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
விலை உயர்வு
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக துவரம் பருப்பு விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தேசிய அளவில் சராசரியாக துவரம் பருப்பு விலை கிலோ ரூ.8 வரை உயர்ந்து கிலோ ரூ.129.40 ஆக இருந்தது. கடந்த மே மாதத்தில் இதன் விலை கிலோ ரூ.121.40 ஆக இருந்தது.
அதிகபட்சமாக கேரள மாநிலம் கொல்லத்தில் ரூ.180 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இதன் விலை கிலோ ரூ.152 ஆக இருந்தது. குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் நடப்பு மாதத்திலும் கடந்த மே மாதத்திலும் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
உச்ச வரம்பு
இதனைதொடர்ந்து மத்திய அரசு துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாநிலங்களிலும் துவரம் பருப்பு இருப்பு வைப்பதற்கான ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விதிமுறையை முறையாக கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய விவசாய விற்பனை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் மூலம் துவரம் பருப்பு இருப்பை பொதுஏலத்தில் விற்பனை செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவு
இந்த பொது ஏலம் எத்தனை முறை நடத்தப்படும் என்றும், விற்பனை செய்யப்படும் துவரம்பருப்பு அளவு குறித்தும் மத்திய அரசு முடிவாக அறிவிக்கவில்லை. இந்த பொது ஏல விற்பனை மக்களிடையே ஏற்படும் தாக்கத்தை பொறுத்து பொது ஏல விற்பனை தொடர்வது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு சந்தைக்கு வரும் வரையில் இந்த ஏற்பாடு நீடிக்கும் என கருதப்படுகிறது.
இவ்வாறு வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.