ராமநாதபுரம்
திருவாடானை யூனியனில் அரசு திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
|திருவாடானை யூனியனில் அரசு திட்டங்கள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் கடந்த 3 தினங்களாக மத்திய குழுவினர் முகாமிட்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை செயல்படுத்தி வரும் வீதம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம், ஆண்டாவூரணி, டி. நாகனி ஆகிய ஊராட்சிகளில் மத்திய குழுவில் இடம் பெற்றிருந்த சுரேஷ் தலைமையிலான குழுவினர் ஊராட்சிகளில் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், சாலை பணிகள், போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். டி. நாகனி ஊராட்சியில் தனிநபர் கழிப்பறைகள், சமுதாய கழிப்பறைகள், குறுங்காடுகள், காய்கறி தோட்டங்கள் மற்றும் ஊராட்சியில் நடைபெற்று வரும் அரசின் திட்டங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர். . இந்த ஆய்வின்போது திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், மேகலா, உதவி திட்ட அலுவலர்கள் முத்துக்குமாரசாமி, சண்முகவள்ளி, ஒன்றிய பொறியாளர்கள் ஜெயந்தி, வேதவள்ளி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜி, ஜென்சி ராணி, கனகராஜ், ஊராட்சி தலைவர்கள் இந்திரா ராஜேந்திரன், சுலைகாபீவி சகுபர் சாதிக், அஞ்சம்மாள் வரிசை முத்து, ஊராட்சி செயலாளர்கள் சங்கையா, கண்ணன் மார்க்கண்டேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.