< Back
மாநில செய்திகள்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி நிதியை வழங்க வேண்டும்-நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி நிதியை வழங்க வேண்டும்-நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தினத்தந்தி
|
9 July 2022 12:09 AM IST

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்

திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்ட பணியை கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூரில் தொடங்கி வைத்தார்.

தற்போது இந்த பணியானது குன்னத்தூரில் இருந்து கீழப்பண்ணை, கோலார்பட்டி, கலிமங்களம் ஆகிய கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த பணியை காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் மிசா.மாரிமுத்து, பொதுச்செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் குன்னத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று பார்வையிட்டனர்.

கால்வாய் பணிகள்

இதுகுறித்து நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுனன் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி தெற்கு வெள்ளாறு, வைகை கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிகள் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்திட்டம் நடைமுறை படுத்துகிறபோது காவிரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோமீட்டர் கால்வாய் பணிகள் முதற்கட்டமாகவும், தெற்கு வெள்ளாறு முதல் வைகை ஆறு வரை 109 கிலோமீட்டர் கால்வாய் பணிகள் இரண்டாம் கட்டமாகவும், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிலோமீட்டர் கால்வாய் பணிகள் மூன்றாம் கட்டமாகவும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.7,500 கோடி நிதி

ஒவ்வொரு நிலையிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கால்வாய் பணிகள் தொடங்கி நடந்து நிறைவேறும் போது பல ஆண்டுகள் ஆகிவிடும். தற்போது மாயனூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் 2 கட்டமாக நடைபெறும் பணியை விரிவுபடுத்தி குறைந்தது 10 இடங்களிலாவது பணியை விரைவு படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு நபார்டு தேசிய வங்கியின் மூலம் மத்திய அரசு ரூ.7,500 கோடி நிதி உத்திரவாதம் கொடுத்துள்ளது. அந்த நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து 3 நிலைகளிலும் ஏக காலத்தில் பணியை விரைவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்