< Back
மாநில செய்திகள்
மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு
நீலகிரி
மாநில செய்திகள்

மேற்கூரையில் இருந்து பெயர்ந்து விழும் சிமெண்டு பூச்சு

தினத்தந்தி
|
26 Jun 2023 9:30 PM GMT

கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


கூடலூர்


கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


வீட்டு வசதி வாரியம்


கூடலூர் மார்தோமா நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடத்தில் 144 வீடுகள் இருந்தது. இதனால் கட்டிடங்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினர் அங்கிருந்து வாடகை வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.


இதைத்தொடர்ந்து ஆபத்தான கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 30 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்பட வில்லை. மேலும் பழைய கட்டிடங்களில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையே பழைய கட்டிடங்களில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து உடைந்து விழுகிறது.


சிமெண்டு பூச்சு


இந்தநிலையில் நேற்று முன்தினம் பி பிளாக் கட்டிடத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்த ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் பயத்தில் அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே கூடலூர் பகுதியில் பருவமழை பெய்ய உள்ளதால் பழுதடைந்த கட்டிடம் மேலும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.


இதனால் பழுதடைந்த கட்டிடம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு குடியிருப்புவாசிகளை விரைவில் மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மாற்ற வேண்டும்


இதுகுறித்து குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது:-


பழுதடைந்த வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். பலமுறை மேற்கூரைகளின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுகிறது. கடந்த காலங்களில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டது. புதிய வீடுகள் கட்டி 2 ஆண்டுகள் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டு உள்ளது. தற்போது புதிய கட்டிடமும் சேதமடைந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடியிருப்பு வாசிகளை புதிய கட்டிடத்திற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்