திருவள்ளூர்
கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு
|ஆவடி சாலையில் கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த கந்தன்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46). கோவில் பூசாரி. இவர் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10.30 மணியளவில் புறநகர் ரெயில் மூலம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கி திருவள்ளூர்- ஆவடி சாலையில் தன்னுடைய வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் முருகேசனை வழிமறித்து கத்த முனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்றார். இதனையடுத்து முருகேசன் இரவு ரோந்துப்பணியில் இருந்த செவ்வாப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அவரிடம் செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகை ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த சத்யா (19) என்பதும் அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முருகேசனிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.