< Back
மாநில செய்திகள்
செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

செல்லியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
2 Jun 2022 3:17 AM IST

முதுவத்தூர், ஒரத்தூர் கிராமங்களில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்லியம்மன் கோவில்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 23-ந் தேதி செல்லியம்மனுக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையடுத்து, தினசரி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு குடி அழைத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், அதனை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் செல்லியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

மஞ்சள் நீராட்டு

முதுவத்தூர், பளிங்காநத்தம், மேலரசூர், கீழரசூர், கல்லக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு கோவில் நிலைய வந்தடைந்தது. இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி குடிபுகுதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றது. கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். ஆங்காங்கு பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

தேரோட்டம்

இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று காலை 10 மணியளவில் செல்லியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைபட்டி, மால்வாய், கண்ணனூர், மேலரசூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 7 மணியளவில் கோவிலில் நிறைவு பெற்றது. விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு இன்னிசை கச்சேரிகள், வாணவேடிக்கைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்