திருச்சி
செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
|கண்ணாக்குடி கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கண்ணாக்குடி கிராமத்தில் மாரியம்மன், செல்லாண்டியம்மன், வெள்ளாந்துரை கருப்புசாமி, மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வைகாசி 1-ந் தேதி மறுகாப்புகட்டுதலுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் குதிரை வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தில் கண்ணாக்குடி, மேலகண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி, பெருவளப்பூர், வ.கூடலூர், குளக்குடி, ரெட்டிமாங்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு 8 மணியளவில் கோவிலில் நிலையடைந்தது. இன்று (வியாழக்கிழமை) அம்மன் கேடயத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கு பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.