கள்ளக்குறிச்சி
கோவில்களில் செல்போன்களுக்கு தடை பொதுமக்கள் கருத்து
|கோவில்களில் செல்போன்களுக்கு தடை தொடா்பா பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.
செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்
திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள், குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
இடையூறாக இருக்கும்
விழுப்புரம் வரதராஜ் லே-அவுட் பகுதியை சேர்ந்த உஷா:-
கோவிலுக்கு எதற்காக செல்கிறோம், நம்முடைய மன அமைதி, நிம்மதிக்காகவும், பல வேண்டுதல்களுக்காகவும் செல்கிறோம். அந்த சமயத்தில் செல்போன் இருந்தால் யாரேனும் நம்மை தொடர்பு கொள்ள அழைப்புகள் வரும், குறுந்தகவல் வரும், வாட்ஸ்-அப் தகவல் இவையெல்லாம் வருவதால் இறைவழிபாட்டில் இருக்கும் நம்முடைய கவனம் சிதறும். இது நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும். திருப்பதி, வேலூர், திருச்செந்தூர் போன்ற கோவில்களில் நடைமுறைப்படுத்தும்போது மற்ற கோவில்களில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கலாம். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
வரவேற்கிறேன்
மேல்மலையனூர் அருகே எதப்பட்டை சேர்ந்த செந்தமிழ்செல்வி:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இந்த தடை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். ஏனெனில் நாம் மனநிம்மதிக்காக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடும்போது சிலரது செல்போன்களில் சினிமா பாடல்கள் ஒலிப்பது வேதனையை மேலும் அதிகரிக்கிறது. கோவில் கருவறை மிகவும் புனிதமானது. இதை சிலர் செல்போனில் படம்பிடித்து பரப்புகின்றனர். தேவையில்லாமல் கோவில்களில் செல்போனில் படம் பிடித்து பரப்புவதால் பெரும்பாலானோருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. ஆகையால் திருச்செந்தூரை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்கள், செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்.
அனைத்து கோவில்களிலும்...
செஞ்சியை சேர்ந்த செல்வம்:-
திருச்செந்தூர் கோவிலில் கருவறைக்குள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்ற சட்டம் வரவேற்கத்தக்கது. இந்த சட்டம் அனைத்து கோவில்களுக்கும் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும். கோவில்களுக்கு செல்போன் எடுத்துச்செல்பவர்கள் அங்குள்ள கருவறையில் புகைப்படம் எடுப்பது சரியான செயல் அல்ல. மனஅமைதியுடன் சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சாமி கும்பிட வந்த அரை மணி நேரமாவது செல்போன் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். எனவே செல்போன் எடுத்துச்செல்வதை அனைத்து கோவில்களிலும் தடை செய்வதுடன் செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சைலண்டில் போட வேண்டும்
திண்டிவனம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஜீவா:-
இன்றைய சூழலில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. இதை கோவிலுக்கு செல்பவர்கள் எடுத்து செல்லக்கூடாது என சட்டம் கொண்டு வந்தால் திடீரென தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை இல்லாமல் போகும். அப்படி சட்டம் கொண்டு வருவதாக இருந்தால் செல்போனை பெற்று திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பினை கோவில் நிர்வாகம் ஏற்க வேண்டும். விலை உயர்ந்த செல்போன்களை கொண்டு வருபவர்கள் கோவில்நிர்வாகத்திடம் தருவதற்கு யோசனை செய்வார்கள். கோவிலுக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்பதைவிட செல்போனை சைலண்டில் போட வேண்டும் அல்லது சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் என சட்டம் போடலாம். சட்டம் போடுவதற்கு முன்பாக அதை சரியாக செயல்படுத்துவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.
காட்சிப்பொருள் அல்ல
இந்து முன்னணி அமைப்பின் கோட்ட தலைவர் சிவா:-
கோவில் என்பது புனிதமானது. கோவிலுக்கு செல்பவர்கள் இறை நம்பிக்கையோடு செல்ல வேண்டும். அங்கு செல்போன் பயன்படுத்துவது, பேசுவது மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி சாமி அருகில் நின்று செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதற்கு கடவுள் ஒன்றும் காட்சிப்பொருள் அல்ல, அதுபோல் கோவிலும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூங்கா அல்ல. இதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மனப்பான்மையை மாற்றுவதற்கு நீதியரசர் கூறிய ஆலோசனைகளை என்னைப்போன்றோர்கள் மனதார வரவேற்கிறோம். இந்த உத்தரவை அனைத்து கோவில்களிலும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
புகைப்படம் எடுக்க தடை விதிக்கலாம்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாபு என்பவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடை என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏெனனில் இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோவிலுக்கு சென்றவுடன் ½ முதல் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாது. குறைந்தது 3 முதல் 6 மணி நேரம் வரைக்கும் தரிசனத்துக்கு நேரமாகும்.
இந்த நேரத்திற்குள் அவசர தேவைகளுக்கு போன் செய்ய வேண்டும் என்றால் முடியாமல் போய்விடும். தற்போது திருச்செந்தூர் கோவிலுக்கு மட்டும் தடை என்பார்கள், பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களுக்கும் தடை என்கிற விதி வரும் சூழல் ஏற்படும்.
எனவே கோவிலுக்கு செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பதை விட, செல்போன் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கலாம். அதை மீறுபவர்களுக்கும் உரிய தண்டனை அளிக்கலாம் என்றார் அவர்.