பெரம்பலூர்
கோவில்களில் செல்போன்களுக்கு தடை
|திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக்கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது. திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையை பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்
திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பெரம்பலூர், அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
வரவேற்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் கோகுல்:- திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள்ளே அர்ச்சகர்கள், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதால், அவர்களால் சரியாக சுவாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. சில பக்தர்கள் தரிசனம் செய்யாமல் செல்போனில் சுவாமியை வீடியோ, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது மற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக உள்ளது. கோவில் என்பது புனிதமான அமைதியான இடம். அங்கு வரும் பக்தர்கள் எந்தவொரு தொந்தரவு இல்லாமல் தரிசனம் செய்தால் மட்டுமே சுவாமியின் அருள் கிடைக்கும். கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கலாம்.
செல்போன் அழைப்பு
வாலிகண்டபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ்:- கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் போது சில பக்தர்களுக்கு செல்போன் அழைப்பு வருகிறது. அதனை அவர்கள் துண்டிக்காமல் சுவாமி தரிசனம் செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அந்த செல்போன் அழைப்பு சத்தம் சுவாமி தரிசனம் செய்யும் மற்ற பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும். திருச்செந்தூர் முருகன் கோவிலை போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் கோவில்களில் அர்ச்சகர்கள், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை விதிக்கலாம்
பெரம்பலூர் வெங்கடேசபுரம், சுந்தர் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி:- திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கோவிலில் பல மணி நேரம் ஆனாலும் செல்போன் இல்லாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு தான் வருகிறார்கள். இதேபோல் தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேயும் பக்தர்கள் பின்பற்றி தான் வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கலாம். முன்னதாக கோவிலுக்கு வெளியே பக்தர்களின் செல்போன்களை வாங்கி பாதுகாப்பாக வைக்கும் வசதியை அரசு ஏற்பாடு செய்த பிறகு, அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.