பழனி முருகன் கோவிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு தடை.!
|பழனி முருகன் கோவிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
திண்டுக்கல்,
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படுவது வழக்கம். குறிப்பாக வாரவிடுமுறை நாளில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில், பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பழனி முருகன் கோவிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, விஞ்ச் கார் மற்றும் ரோப் கார் பகுதிகளில் சென்போன்களை கைபேசி பாதுகாப்பு மையங்களில் ரூ.5 செலுத்தி வைத்துச்செல்லலாம் என்றும், தரிசனத்திற்கு பிறகு கைபேசி மையங்களில் தங்களுடைய செல்போன்களை பெற்றுச்செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.