திருநெல்வேலி
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
|நெல்லையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்
நெல்லையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ''எங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருவள்ளுவர் தெருவில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அடிப்படை வசதிகள்
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவரும் ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினருமான மாரியப்ப பாண்டியன் கொடுத்த மனுவில், ''ராமையன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சிவாஜிநகர், அரசு புதுகாலனி, சைமன்நகர், சகி நகர், வ.உ.சி.நகர், வேப்பங்குளம், வி.எம்.நகர், சுபராசிநகர், மணிநகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
வீட்டுமனை பட்டா
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வக்கீல்கள் மனு வழங்கினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள், குன்னத்தூர் பகுதியில் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
சங்கர்நகர் ம.தி.மு.க. செயலாளர் பண்டாரகுளம் முருகன் கொடுத்த மனுவில், ''சங்கர்நகர் பேரூராட்சி பகுதியில் வீடுகளுக்கும், குடிநீர் தொட்டிகளுக்கும் சுகாதாரம் சம்பந்தமான மருந்துகளை ஊற்றும் பணிகள் செய்து வந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
போக்குவரத்து நெரிசல்
எஸ்.டி.பி.ஐ. மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கொடுத்த மனுவில், ''நெல்லையில் பல வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந்தேதி மேலப்பாளையத்தில் நடந்த விபத்தில் மசூத் என்பவர் இறந்தார். பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அம்பை சாலையை மேலும் விரிவுபடுத்த வேண்டும். சந்தை ரவுண்டானா சிக்னல் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தர போக்குவரத்து காவலர்களை நியமித்து, போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.