சென்னை
ராயப்பேட்டையில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்தில் செல்போன் டவர் எரிந்து நாசம்
|ராயப்பேட்டையில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்தில் செல்போன் டவர் எரிந்து நாசமானது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் 4 மாடிகள் கொண்ட 'ரியல் டவர்' என்ற தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்றொரு அறையிலும் பற்றியது. இதனால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.
தீ விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மயிலாப்பூர், தேனாம்பேட்டை மற்றும் எழும்பூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தால் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்த செல்போன் டவர் மற்றும் பழைய பொருட்கள், சேமிப்பு குடோன் ஆகியவை முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து அஜந்தா மேம்பாலம் சாலை வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன.
நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வணிக வளாகத்தில் இருந்த கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதேபோல, உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.