< Back
மாநில செய்திகள்
செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்

தினத்தந்தி
|
19 Jun 2023 11:03 PM IST

கல்லாத்தூர் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மநு கொடுத்தனர். மொத்தம் 375 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தடுத்து நிறுத்த வேண்டும்

கூட்டத்தில் திருப்பத்தூரை அடுத்த கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடியிருப்புக்கு மத்தியில் தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் 2 முறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை.

பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு

வாணியம்பாடியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர் அளித்துள்ள மனுவில் கடந்த மார்ச் மாதம் வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் கனகா மேடு பகுதியில் 32 மூன்றாம் பாலினத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை அதேபகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். எங்கள் இடத்தை அளக்க விடாமல் தகராறு செய்கின்றனர். எனவே, வருவாய்த் துறையினர் எங்கள் இடத்தை அளந்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து 9 பயனாளிகளுக்கு ரூ.96 ஆயிரத்து 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மயக்கம் போட்டு விழுந்த பெண்

கூட்டத்தில் பாச்சல் ஊராட்சி லட்சுமதி நகரை சேர்ந்த செல்வராணி (41) என்பவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளிக்க வந்தார். கலெக்டரிம் மனு அளிக்க வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்