ரெயில் நிலையங்களில் தூங்குபவர்களை குறிவைத்து செல்போன் திருட்டு
|சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருடிய வடமாநிலத்தவரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரை சென்னை சென்டிரலில் இருந்து ரெயில் ஏற்றி விடுவதற்காக ரெயில் நிலையம் வந்தார். ரெயில் வருவதற்கு தாமதம் ஆனதால் ரெயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் உள்ள இருக்கையில் 2 பேரும் அமர்ந்திருந்தனர். அப்போது, விக்னேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிறிது நேரம் தூங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விக்னேஷ் திடீரென எழுந்து பார்த்தபோது, தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த விக்னேஷ் ஒவ்வொரு இடமாக தேடினார். ஆனால், எங்கு தேடியும் செல்போன் கிடைக்காததால் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி அருகில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்ததை கண்ட ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, ஜாா்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (41) என்பதும், விக்னேஷ் செல்போனை திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஓடும் ரெயிலில் தூங்குபவர்களிடமும், கவனக் குறைவாக இருப்பவர்களிடமும் செல்போன்களை திருடிச்செல்வதும் தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.