சென்னை
சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பல் தலைவன் அதிரடி கைது - கூலிக்கு ஆள் வைத்து அட்டூழியம்
|சென்னையில் செல்போன் பறிக்கும் கும்பல் தலைவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னையில் அடுத்தடுத்து 10 பேரிடம் செல்போன்களை பறித்து பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக சமீபத்தில் அஜய், சபியுல்லா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நாகூர்மீரான் என்பவர் கூலிக்கு 5 பேரை வேலைக்கு அமர்த்தி செல்போன் பறிக்கும் தொழிலை செய்து வருவதாக தெரிய வந்தது. ஒரு செல்போன் பறித்தால், ஐபோனாக இருந்தால் ரூ.1,000 கூலியாகவும், இதர ஆண்ட்ராய்டு போனாக இருந்தால் ரூ.500-ம் கிடைக்கும்.
அஜய், சபியுல்லா ஆகியோர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகூர்மீரானும் (வயது36) கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த அவரிடம் இருந்து 16 செல்போன்கள் மீட்கப்பட்டது. மேலும் அவரிடம் வேலை பார்த்த செங்குன்றத்தைச்சேர்ந்த விக்கி, கிருபாகரன் ஆகிய மேலும் இருவரும் கைதானார்கள். இவர்கள் சமீபத்தில் மட்டும் 13 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். நாகூர்மீரான் சென்னையில் பறிக்கும் செல்போன்களை உடனடியாக வெளிமாநிலங்களுக்கு கடத்திச்சென்று அங்கு நல்ல விலைக்கு விற்று விடுவாராம். வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த கைது வேட்டையில் ஈடுபட்டனர்.