சென்னை
பூந்தமல்லி சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
|பூந்தமல்லி சிறையில் கைதியிடம் போலீசார் செல்போன் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அப்பகுதியில் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டதை எதிர்த்ததாக கூறப்பட்ட நிலையில், மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, இது தொடர்பாக சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறை சூப்பிரண்டு முத்துராமன் கிளை கைதிகளின் அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிஜாம் அலி தங்கி இருந்த அறையின் கழிவறையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நிஜாம் அலிக்கு செல்போன், பேட்டரிகளை கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிறையில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.