< Back
மாநில செய்திகள்
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

தினத்தந்தி
|
14 March 2023 4:41 PM GMT

வேடசந்தூர் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

செல்போன் பறிப்பு

பீகார் மாநிலம் பாஹிஅகமத்பூரை சேர்ந்தவர் ரிஜ்வான் ஆலிம் (வயது 28). இவர், வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ரிஜ்வான் ஆலிமிடம் புகையிலை கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் புகையிலை இல்லை என்று கூறினார். இதனையடுத்து திடீரென அவர்கள், ரிஜ்வான்ஆலிமிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.

2 பேருக்கு தர்ம அடி

அப்போது ரிஜ்வான்ஆலிம், அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தை இழுத்து பிடித்து கொண்டு சத்தம் போட்டார். இதனால் அவர்களால் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முடியவில்லை. இதற்கிடையே ரிஜ்வான்ஆலிமின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் செல்போனை பறித்த 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களிடம் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேடசந்தூர் அருகே உள்ள கருப்பதேவனூரை சேர்ந்த மகாராஜா (27) மற்றும் 16 வயது சிறுவன் என்று தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்